Monday, September 30, 2013

உயர்ந்த நிலைக்கு வழிவகுக்கும் செயல் முறைகள்!



இன்றைய மாறிவரும் தொழில்முறையில், உலகநாடுகளின் போட்டியைச் சமாளிக்க நாம் ஒவ்வொருவரும் புதிய வழிமுறை, கூரிய  சிந்தனை ஆகியவற்றை கைக் கொள்ள வேண்டும்.

நம்முடைய வீடோ, அலுவலகமோ, எதுவானாலும் தூய்மை இல்லாமல், ஒழுங்குமுறை இல்லாமல் இருந்தால் நிச்சயமாய் நம்மால் உயர்ந்த பலனைப் பெற முடியாது. மேலும் பலனைத் தராத உழைப்பு நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், வணிகத்திலும் தோல்வி அடைய வைத்து  விடும்.

உலகம் மாறுகின்ற வேகத்தில்; ஒவ்வொருவரும் முன்னேற்ற முறைகளைக் கற்றுணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
இருக்கும் பொருட்களைக் கொண்டு நம் அன்றாட வாழ்வில்  வெற்றி பெறுவதற்கு, நாம் ஜப்பானிய முறைகளையும், மற்றவைகளையும் பயன்படுத்துவோம்.

நமது அன்றாடப் பிரச்சனைகள்!

நாம் எல்லோரும் பரவலாய் வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொழில் செய்யும் இடத்திலோ எதிர்கொள்ளும்  சிக்கல் என்னவென்றால், தேவையானவற்றைத்  தேவையான நேரத்தில் கிடைக்கப்  பெறாமல் இருப்பது . இதனால் நாம்: அதை தேடத் தொடங்கி; காலத்தை வீணடிக்கிறோம். இதன் காரணமாக ஏற்படும்  நேர இழப்புகளும், ஏமாற்றங்களும், நமக்கு ஏற்படுத்துவது   கோபம், கவலை, குழப்பம், பதைபதைப்பு மற்றும் பல. இதனால் மன அமைதி இழந்து தொழிலை நேசிப்பதற்குப்  பதில் மனதளவில் வெறுக்க தொடங்குகிறோம்.


நாம் பொருட்களைத் தேடும் முயற்சியிலேயே காலத்தை வீணடிக்கிறோம் என்று நீங்கள் நிச்சயமாய் ஒத்துகொள்வீர்கள். இதற்கு  அடிப்படையான மூலப் பிரச்னை என்னவென்றால், நம் அன்றாட வாழ்கையில் சரியான அடிப்படை செயல்முறைகளில் சரியான ஒழுங்குமுறை இல்லாமல் இருப்பதே. 


தினமும் என்ன செய்கிறோம்  நாம்?

கால் பகுதி நேரத்தைத் தேடுதலில் செலவிடுகிறோம்.

எதனால் தேடுகிறோம்?  


Ø  தேவையற்றைகளோடு கலந்து வைத்தல்.

Ø  கழிவுகளோடு சேர்த்து வைத்தல்.

Ø  வைத்த இடத்தில்  இல்லாமல் இருத்தல்.

Ø  நிலையான இடத்தை ஒதுக்காமல் இருத்தல்.

Ø  அடையாளம்  பெயர் இல்லாமல் வைத்தல்.

Ø  காலியாகும்வரை  தெரியாத நிலை.

Ø  இருப்பு எவ்வளவு என  அறிய முடியாமை.

Ø  அடையாளம் காணமுடியாத தூரம். 

Ø  பார்வையில்  படாமல் வைத்தல்.

Ø  குறிப்பிட்ட இடத்தில் வைக்காதிருத்தல்.

Ø  பெயர் பலகை இல்லாதிருத்தல். 

Ø  ஒழுங்குமுறை இல்லாது வைத்தல்.


ஆகவே,  நாம் உடனே செய்ய வேண்டியது பயனற்றப் பொருட்களை பணியிடத்திலிருந்து அகற்றுதலாகும். "பழைமையான பொருட்களைக் காக்க வேண்டியது அருங்காட்சியகத்திலேயேயன்றி நாம் அன்றாடம் வேலைசெய்யும் இடத்தில் அல்ல"

ஒழுக்கம் உந்தும் ஆக்கம்:

ü  பொருட்களைச் சீராக அமைதல்.

ü  எப்பொழுதும் தேவைபடுபவைகளை அருகில், எளிதில் எடுக்குமாறு வைத்தல்.

ü  அவ்வப்பொழுது தேவைப்படுபவைகளை  சிறிது துரத்தில் வைத்தல். 

ü  எப்பொழுதாவது தேவைப்படுபவைகளை சற்று தொலைவில் தள்ளிவைத்தல்.  

ü  என்றோ தேவைப்படுபவைகளை கிடங்குகளில், பரண்களில் வைத்தல். 

ü  தேவை, ஆனால் எப்பொழுது  தேவை எனத் தெரியாது என்றவைகளில் அத்யாவசியமான  இருப்பை விட்டு விட்டு மீதியை விற்று  முதலாக்கி கொள்ளலாம்.


 இது  நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை  எளிமையாய்க் கண்டுபிடிக்க, கையாளச் செய்ய மிகவும் உதவியாய்  இருக்கும்.


உயர்ந்த நிலையை அடைய விதிமுறைகளை உருவாக்கவேண்டும்.

நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அதை வழக்கமாகச் செய்தால்  தொடர் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வழிகாட்டுதலை வரவேற்று பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம், இது மற்றவர்களையும்  ஈர்க்கும்.


செயல் முறைகளை தணிக்கை மூலம் அளவிட்டு, மேலும் முன்னெற்ற வழிவகுத்தலால் குழுவாக ஒருமனதாக செயல்படும் பண்பாட்டை உருவாக்கலாம்.


தொடர்ந்து தொய்வில்லாமல், நிறுவனத்தில்  பயின்ற நல் ஒழுக்கத்தை, பொது இடங்களிலும், வீட்டிலும் கடைபிடிப்பதால் ஒட்டு மொத்த  சமுதாய வளர்ச்சியையும் உன்னதமான சுற்றுப்புறச் சூழலையும் உருவாக்கமுடியும்.


நாம் பணியிடத்தை எப்பொழுதும் தூய்மையாய் வைத்திருப்பதற்கு நம்மை வழிநடத்தும், சில கொள்கைகள், சட்ட திட்டங்கள் முதலானவற்றை நாம் மேற்கொண்டு வந்தாலே தொழிற்சாலையை  நேசிக்கும் சூழ்நிலையை எற்படுத்தி பணித்  திறனையும் அதிகரிக்க முடியும். நீங்கள் மாறாவிட்டால் எதுவும் மாறாது .


மாற்றம் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சி, மாற்ற முடியுமா? முடியும் நம்மாலும் முடியும். நன்றி. 

 


ஜப்பானிய முறையான 5S பற்றி நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்..

Saturday, September 28, 2013

பணியும் மனநிறைவும்!


பணியில் ஒவ்வொரு பணியாளருக்கும் முழு ஈடுபாடு இருக்க வேண்டும்.  நீங்கள் பணி செய்யும் நிறுவனம்  "என்னுடைய நிறுவனம்"  "இந்த நிறுவனத்தில் நான் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறேன்" என்ற உரிமை ("OWNERSHIP")  அனைவருக்கும் வரவேண்டும் என்றால்,  நீங்கள் ஒவ்வொருவரும்;  பணி  செய்வதில் திருப்தி அடையவேண்டும்.

பணிசெய்யும்போது  உங்களுடைய  ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ  அந்த அளவுக்கு உங்களுடைய பணியில் மனநிறைவும், திருப்தியும் அதிகரிக்கும்.   உங்களுடைய பணியில் முழு ஈடுபாட்டுடன் நீங்கள்  பணி  செய்வதற்கு இந்த சுயநெறிப் பணிகுழு முதன்மையானதாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல வழிகாட்டுதலாகவும்  இருக்கும்.

வாடிக்கையாளர்கள் மனநிறைவு அடைய, உங்களுடைய பணியை நீங்களே  திட்டமிட்டு அதை அன்றே முடிப்பதற்கு முயற்சி செய்து முழுமனதுடன் ஈடுபட்டால், உங்களுடைய பணி  நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக ஒரு காரணமாக அமையும்.  உங்களுடைய விடா முயற்சியும், கூட்டு முயற்சியும் ஒன்று சேர்ந்து பணியில் உயர்வை (EXCELLENCE AT WORK) அடைய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.  ஆக, நாம் எந்த ஒரு சிறு செயலைச் செய்தாலும் அதில் உயர்வானதொரு (EXCELLENCE) இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், குறிக்கோளுடனும் பணி  செய்ய வேண்டும்.

நன்றி. ஸ்ரீவத்ஸ் ராம், வீல்ஸ் இந்தியா, சுயநெறிப்  பணிக்குழு